Link to home pageLanguagesLink to all Bible versions on this site
19
1 யெகோவா கூறுவது இதுவே: நீ போய் குயவனிடமிருந்து களிமண் ஜாடி ஒன்றை வாங்கு. உன்னுடைய மக்களில் முதியவர்கள் சிலரையும், ஆசாரியர்களில் சிலரையும் கூட்டிக்கொண்டு, 2 கிழக்கு வாசலின் அருகேயுள்ள பென் இன்னோம் பள்ளத்தாக்கிற்குப் போ. அங்கே நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளை அறிவி. 3 நீ அவர்களிடம், “யூதாவின் அரசர்களே! எருசலேமின் மக்களே! கேளுங்கள். இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இந்த இடத்தில் நான் ஒரு பேராபத்தைக் கொண்டுவரப் போகிறேன். அதைப்பற்றிக் கேட்கும் ஒவ்வொருவருடைய காதுகளிலும் அது உறுத்திக்கொண்டே இருக்கும்” என்று சொல். 4 ஏனெனில், இவர்கள் என்னைக் கைவிட்டு, இந்த இடத்தை அந்நிய தெய்வங்களின் இடமாக்கினார்கள். இவர்கள் இந்த இடத்தில் தாங்களோ, தங்கள் முற்பிதாக்களோ அல்லது யூதாவின் அரசர்களோ ஒருபோதும் அறிந்திராத தெய்வங்களுக்குப் தூபங்காட்டி, குற்றமற்ற இரத்தத்தினால் இந்த இடத்தையும் நிரப்பியிருக்கிறார்கள். 5 இவர்கள் தங்கள் மகன்களைப் பாகாலுக்குப் பலிகளாக நெருப்பில் பலியிடுவதற்காக பாகாலின் மேடைகளையும் கட்டியிருக்கிறார்கள். இப்படியான ஒரு செயலை நான் கட்டளையிட்டதுமில்லை, சொல்லியதுமில்லை. அது என்னுடைய மனதில் தோன்றினதுமில்லை. 6 ஆகையால் எச்சரிக்கையாயிருங்கள். இதோ, இந்த இடம் தோப்பேத் என்றோ பென் இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ அழைக்கப்படாமல், படுகொலைப் பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் நாட்கள் வரும் என்று யெகோவா அறிவிக்கிறார்.

7 இந்த இடத்தில் யூதாவினுடைய, எருசலேமினுடைய திட்டங்களை அழித்துப்போடுவேன். அவர்களுடைய பகைவர்களுக்கு முன்பாக அவர்களைக் கொல்லத் தேடுகிறவர்களின் கையிலுள்ள வாளினால் நான் அவர்களை விழப்பண்ணுவேன். அவர்களின் உடல்களைப் பூமியின் மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும் உணவாகக் கொடுப்பேன். 8 நான் இந்தப் பட்டணத்தைப் பாழாக்கி, அதை ஒரு கேலிக்குரியதாக்குவேன். அதைக் கடந்துபோகிற யாவரும் பிரமித்து, அதற்கு ஏற்பட்ட எல்லா காயங்களைக் கண்டு ஏளனம் செய்வார்கள். 9 அவர்களை தங்கள் மகன்களின் மாம்சத்தையும், மகள்களின் மாம்சத்தையும் சாப்பிடச் செய்வேன். அவர்களை கொல்லவேண்டுமென்றிருக்கும் அவர்களுடைய பகைவர்களினால் அவர்கள் முற்றுகையிடப்பட்டு துன்பப்படும்போது அவர்கள், ஒருவர் மற்றவரின் மாம்சத்தைச் சாப்பிடுவார்கள்.

10 “அதன்பின் உன்னோடு வந்த மனிதர் பார்த்துக்கொண்டிருக்கையில் இந்த ஜாடியை உடை. 11 நீ அவர்களிடம், ‘சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: உடைக்கப்பட்டு திருத்த முடியாதிருக்கிற இக்குயவனுடைய ஜாடியைப்போல் நான் இந்த தேசத்தையும், இந்தப் பட்டணத்தையும் நொறுக்கிப் போடுவேன். தோப்பேத்தில் இடமில்லாமல் போகுமட்டும் இறந்தவர்களை அங்கே புதைப்பார்கள். 12 இந்த இடத்திற்கும், இங்கு வாழ்பவர்களுக்கும் இப்படியே செய்வேன் என்று யெகோவா அறிவிக்கிறார். இந்தப் பட்டணத்தை தோப்பேத்தைப் போலாக்குவேன். 13 எருசலேமின் வீடுகளும், யூதா அரசர்களின் வீடுகளும் தோப்பேத்தைப்போல் கறைப்படுத்தப்படும். நட்சத்திர சேனைகளுக்குத் தங்கள் கூரைகளின்மேல் தூபங்காட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளைச் செலுத்திய எல்லா வீடுகளும் அப்படியே கறைப்படும்.’ ”

14 அதன்பின் எரேமியா, யெகோவா தன்னை இறைவாக்கு உரைக்கும்படி அனுப்பின தோப்பேத்திலிருந்து திரும்பிவந்தான். அவன் யெகோவாவின் ஆலய முற்றத்தில் நின்று எல்லா மக்களிடமும் சொன்னதாவது: 15 “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘கேளுங்கள்; இந்த மக்கள் தலைக்கனம் உள்ளவர்களானபடியாலும், என் வார்த்தைகளைக் கேட்காதபடியாலும் நான் இப்பட்டணங்களின் மேலும், அதைச் சுற்றியுள்ள எல்லா கிராமங்களின் மேலும் அவைகளுக்கு எதிராக நான் கூறியிருந்த எல்லா பேராபத்துக்களையும் கொண்டுவருவேன் என்கிறார்’ என்றான்.”

<- எரேமியா 18எரேமியா 20 ->