19 யெகோவா என்னிடம் சொன்னது இதுவே: “யூதாவின் அரசர்கள் போய்வருகிறதான மக்கள் வாசலருகே[a] போய் நில். எருசலேமின் மற்ற எல்லா வாசல்களிலும் போய் நில். 20 அங்கே நீ அவர்களிடம், ‘இந்த வாசல்களில் உட்செல்லும் யூதாவின் அரசர்களே! யூதாவின் மக்களே! எருசலேமில் குடியிருக்கிறவர்களே! நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள் என்று சொல். 21 யெகோவா சொல்வது இதுவே; எருசலேமின் வாசல்களின் வழியே ஓய்வுநாளில் ஒரு சுமையாவது சுமந்து செல்லாதிருக்கவும் அல்லது உள்ளே கொண்டுவராமல் இருக்கவும் கவனமாயிருங்கள். 22 நீங்கள் ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து எந்தச் சுமையையும் கொண்டுவராமலும், எந்த ஒரு வேலையையும் செய்யாமலும் இருங்கள். அந்த நாளை நான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி, பரிசுத்த நாளாக கைக்கொள்ளுங்கள் என்றேன். 23 இருப்பினும் அவர்கள் அதைக் கேட்கவுமில்லை; கவனிக்கவுமில்லை. அவர்கள் பிடிவாதமுள்ளவர்களாய் என் புத்திமதியைக் கேட்காமலும், என் திருத்துதலை ஏற்றுக்கொள்ளாமலும் இருந்தார்கள். 24 ஆனால் யெகோவா அறிவிக்கிறதாவது, நீங்கள் எனக்குக் கீழ்ப்படியக் கவனமாயிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் கைக்கொள்ளுங்கள். அந்நாளில் இந்தப் பட்டணத்து வாசல்களுக்குள்ளே, ஒரு சுமையையும் கொண்டுவராமலும், ஒரு வேலையையும் செய்யாமலும் இருங்கள். 25 அப்பொழுது தாவீதின் அரியணையில் அமரும் அரசர்கள், அவர்களுடைய அதிகாரிகளுடன் இந்தப் பட்டணத்து வாசல்களுக்குள் வருவார்கள். அவர்களும், அவர்கள் அதிகாரிகளும் தேர்களிலும், குதிரைகளிலும் ஏறி வருவார்கள். அவர்களுடன் யூதா மனிதர்களும் எருசலேமில் வாழ்பவர்களும் வருவார்கள். இப்பட்டணமும் என்றைக்கும் குடிமக்களை உடையதாயிருக்கும். 26 யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமைச் சுற்றியுள்ள கிராமங்களிலுமிருந்து மக்கள் வருவார்கள். பென்யமீன் பிரதேசத்திலிருந்தும், மேற்கு மலையடிவாரங்களிலிருந்தும், மலைநாட்டிலும், யூதாவின் தெற்குப் பகுதிகளிலிருந்தும்[b] வருவார்கள். அவர்கள் தகன காணிக்கைகளையும், பலிகளையும், தானிய காணிக்கைகளையும், தூபங்களையும், நன்றியறிதல் காணிக்கைகளையும் யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவருவார்கள். 27 ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாமல், ஓய்வுநாளை பரிசுத்தமாகக் கைக்கொள்ளத் தவறி, அந்த நாளில் பாரத்தைச் சுமந்துகொண்டு எருசலேமின் வாசல்களின் வழியே வருவீர்களானால், நான் எருசலேமின் வாசல்களில் அணைக்க முடியாத நெருப்பை மூட்டுவேன். அது எருசலேமின் அரண்களைச் சுட்டெரிக்கும்’ என்று யெகோவா அறிவிக்கிறார்.”