யெகோவாவே, உமது கைகளே அதைப் பரிசுத்த இடமாக ஏற்படுத்தியது.
18 “யெகோவா என்றென்றைக்கும் அரசாளுவார்.”
19 பார்வோனின் குதிரைகள் தேர்களோடும், குதிரைவீரர்களோடும் கடலுக்குள் சென்றன. அப்பொழுது யெகோவா கடல் தண்ணீரைத் திருப்பி அவர்கள்மேல் கொண்டுவந்தார்; ஆனால் இஸ்ரயேலரோ கடல் வழியாகக் காய்ந்த தரையில் நடந்துபோனார்கள். 20 அப்பொழுது இறைவாக்கினளான ஆரோனின் சகோதரி மிரியாம், தன் கையில் ஒரு தம்புராவை எடுத்துக்கொண்டாள்; மற்ற எல்லா பெண்களும் தம்புராவோடும் நடனத்தோடும் அவளைப் பின்தொடர்ந்தார்கள். 21 அப்பொழுது மிரியாம் அவர்களுக்குப் பதிலளித்துப் பாடியது:
“யெகோவாவைப் பாடுங்கள்,
ஏனெனில் அவர் உன்னதத்தில் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
குதிரையையும் அதை ஓட்டியவனையும்
கடலிலே வீசியெறிந்தார்.”
ஏலீம் மற்றும் மாராவின் கசப்பான தண்ணீர்
22 அதன்பின் மோசே இஸ்ரயேலரைச் செங்கடலிலிருந்து சூர் பாலைவனத்திற்கு நடத்திச் சென்றான். அவர்கள் மூன்று நாட்களாக பாலைவனத்தில் பயணம் செய்தார்கள், அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. 23 அவர்கள் மாரா என்னும் இடத்திற்கு வந்தபோது, அவ்விடத்திலுள்ள தண்ணீர் கசப்பாயிருந்தபடியால், அவர்களால் அதைக் குடிக்க முடியவில்லை. அதனால்தான் அந்த இடம் மாரா[a] என அழைக்கப்பட்டது. 24 எனவே இஸ்ரயேல் மக்கள், “நாங்கள் எதைக் குடிப்போம்?” என்று கேட்டு மோசேக்கு எதிராக முறுமுறுத்தார்கள்.
25 மோசே யெகோவாவிடம் அழுது விண்ணப்பித்தான், அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காட்டினார். அவன் அதைத் தண்ணீருக்குள் எறிந்தபோது, தண்ணீர் இனிமையாக மாறியது.
பின்பு யெகோவா ஒரு விதிமுறையையும், ஒரு சட்டத்தையும் ஏற்படுத்தி, அங்கே அவர்களைச் சோதித்தார். 26 அவர், “நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் குரலுக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, அவருடைய பார்வையில் சரியானதைச் செய்து, அவருடைய கட்டளைகளைக் கவனித்து, அவருடைய எல்லா விதிமுறைகளையும் கைக்கொண்டு நடப்பீர்களானால், நான் எகிப்தியர்மேல் கொண்டுவந்த வியாதிகளில் எதையும் உங்கள்மேல் கொண்டுவரமாட்டேன்; ஏனெனில் நானே உங்களைச் சுகமாக்குகிற யெகோவா” என்றார்.
27 அதன்பின் அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள், அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தன; அவர்கள் அங்கே தண்ணீர் அருகே முகாமிட்டார்கள்.