Link to home pageLanguagesLink to all Bible versions on this site
14
1 அபியா இறந்து, தாவீதின் நகரத்திலே தன் முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகனான ஆசா அரசனானான்; அவனுடைய காலத்தில் நாடு பத்து வருடத்திற்கு சமாதானத்துடன் இருந்தது.
யூதாவின் அரசன் ஆசா

2 ஆசா தன் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் நல்லவற்றையும் சரியானவற்றையும் செய்தான். 3 அவன் அந்நிய பலிபீடங்களையும் வழிபாட்டு மேடைகளையும் அகற்றி, சிலைத் தூண்களை நொறுக்கி, அசேரா தேவதையின் கம்பங்களையும் வெட்டிப்போட்டான். 4 அவன் யூதா மக்களுக்குத் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைத் தேடும்படியும், அவருடைய சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியும்படியும் கட்டளையிட்டான். 5 அவன் யூதாவின் ஒவ்வொரு பட்டணங்களிலும் இருந்த வழிபாட்டு மேடைகளையும், தூபபீடங்களையும் அகற்றிப்போட்டான். ராஜ்யம் அவனுடைய ஆட்சியின்கீழ் சமாதானமாய் இருந்தது. 6 நாடு சமாதானமாய் இருந்ததால் அவன் யூதாவின் அரணுள்ள பட்டணங்களைக் கட்டினான். அந்த வருடங்களில் யாரும் அவனுடன் போர் செய்யவில்லை. யெகோவா அவனுக்கு ஓய்வைக் கொடுத்திருந்தார்.

7 ஆசா யூதா மக்களிடம், “இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவற்றைச் சுற்றி மதில்களையும், கோபுரங்களையும், தாழ்ப்பாள்கள் கொண்ட வாசல்களையும் அமைப்போம். நாம் நமது இறைவனாகிய யெகோவாவைத் தேடியதால், இந்த நாடு இன்னும் நம்முடையதாகவே இருக்கிறது. நாம் அவரைத் தேடினோம், அவர் நமக்கு எல்லாப் பக்கங்களிலும் இளைப்பாறுதலைக் கொடுத்தார்” என்றான். அப்படியே அவர்கள் பட்டணங்களைக் கட்டி, செழிப்படைந்தார்கள்.

8 ஆசாவுக்குப் பெரிய கேடயங்களும் ஈட்டிகளும் வைத்திருந்த யூதாவைச் சேர்ந்த 3,00,000 போர்வீரர்கள் இருந்தார்கள். சிறிய கேடயங்களும் வில்லுகளும் வைத்திருக்கும் பென்யமீனைச் சேர்ந்த 2,80,000 போர்வீரர்களும் இருந்தார்கள். இவர்கள் எல்லோரும் தைரியமிக்க போர்வீரர்கள்.

9 கூஷியனான சேரா அவர்களுக்கு எதிராக ஒரு பெரிய படையுடனும், முந்நூறு தேர்களுடனும் மரேஷாவரை அணிவகுத்து வந்தான். 10 ஆசா அவனை எதிர்கொள்ள வெளியே சென்றான். அவர்கள் மரேஷாவுக்கு அருகேயுள்ள செபத்தா பள்ளத்தாக்கில் யுத்தத்திற்கென அணிவகுத்து நின்றார்கள்.

11 அப்பொழுது ஆசா தன் இறைவனாகிய யெகோவாவை கூப்பிட்டு, “யெகோவாவே, வலிமைமிக்கவனுக்கு எதிராய், வலிமையற்றவனுக்கு உதவிசெய்ய உம்மைப்போல் வேறு யாருமில்லை. எங்கள் இறைவனாகிய யெகோவாவே எங்களுக்கு உதவிசெய்யும். ஏனெனில் நாங்கள் உம்மையே நம்பியிருக்கிறோம். உமது பெயரிலேயே நாங்கள் இந்தப் பெரிய படைக்கு எதிராய் வந்திருக்கிறோம். யெகோவாவே நீரே எங்கள் இறைவன்; உம்மை மனிதன் எதிர்த்து மேற்கொள்ள நீர் அனுமதிக்காதேயும்” என்று சொன்னான்.

12 யெகோவா யூதாவுக்கும் ஆசாவுக்கும் முன்பாக கூஷியரை முறியடித்தார். கூஷியர் ஓடினார்கள். 13 ஆசாவும் அவனுடைய இராணுவமும் கேரார்வரை பின்தொடர்ந்து துரத்திச் சென்றனர். ஏராளமான எண்ணிக்கையுடைய கூஷியர் விழுந்தார்கள். அதனால் அந்த படைக்குத் திரும்பவும் வலிமையடைய முடியவில்லை. யெகோவாவுக்கும், அவருடைய வீரருக்கும் முன்பாக அவர்கள் முறியடிக்கப்பட்டார்கள். யூதாவின் மனிதர் அதிக அளவு கொள்ளைப்பொருட்களை அள்ளிக்கொண்டு போனார்கள். 14 யெகோவாவின் பயங்கரம் அவர்கள்மேல் வந்ததால், கேராரைச் சுற்றியிருந்த கிராமங்களை எல்லாம் யூதாவின் மனிதர் அழித்துப்போட்டார்கள். அங்கே அதிகளவு கொள்ளைப்பொருட்கள் இருந்தன. அவர்கள் எல்லாக் கிராமங்களையும் கொள்ளையடித்தார்கள். 15 அத்துடன் அவர்கள் மந்தை மேய்ப்போரின் கூடாரங்களையும் தாக்கி, திரளான செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும், ஒட்டகங்களையும் கைப்பற்றி, அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர்.

<- 2 நாளாகமம் 132 நாளாகமம் 15 ->