Link to home pageLanguagesLink to all Bible versions on this site
சங்கீதம் 2
1 தேசங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்?
மக்கள் வீணான காரியத்தை ஏன் சிந்திக்கவேண்டும்?
2 யெகோவாவுக்கு விரோதமாகவும்,
அவர் அபிஷேகம்செய்தவருக்கு விரோதமாகவும்,
பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று,
அதிகாரிகள் ஒன்றாக ஆலோசனைசெய்து:
3 அவர்களுடைய கட்டுகளை அறுத்து,
அவர்களுடைய கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்; என்கிறார்கள்.
4 பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்;
ஆண்டவர் அவர்களை இகழுவார்.
5 அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களுடன் பேசுவார்.
தமது கடுங்கோபத்திலே அவர்களைக் கலங்கச்செய்வார்.
6 நான் என்னுடைய பரிசுத்தமலையாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்செய்து வைத்தேன் என்றார்.
7 தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்;
யெகோவா என்னை நோக்கி, நீர் என்னுடைய மகன்,
இன்று நான் உம்மை பிறக்கச்செய்தேன்;
8 என்னைக் கேளும், அப்பொழுது தேசங்களை உமக்குச் சொத்தாகவும்,
பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
9 இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி,
குயவனின் மண்பாண்டத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.
10 இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள்,
பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாக இருங்கள்.
11 பயத்துடனே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்,
நடுக்கத்துடனே மகிழ்ந்திருங்கள்.
12 தேவமகன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருப்பதற்கு,
தேவனை முத்தம்செய்யுங்கள்;
கொஞ்சக்காலத்திலே தேவனுடைய கோபம் பற்றியெரியும்;
அவரிடம் அடைக்கலமாக இருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.

<- சங்கீதங்கள் 1சங்கீதங்கள் 3 ->